UPCOMING EVENTS

கௌதனா ஷெய்கனா ஸெய்யிது ஸாதாத் உமரொலி மௌலானா ரழியல்லாஹு தஆலா அன்ஹு – பாகம் 2

வழங்குபவர்கள்: www.muhieddeentv.com / www.quthbiyamanzil.org

இந்த பதிவில் அப்பா அவர்களின் ஞானத்தின் ஆழங்கள் நிறைந்த வாழ்வை பற்றி சிந்தனை செய்து பார்ப்போம்! புரிந்து கொள்ளும் தவ்ஃபீக்கை தருவானாக!

அப்பா அவர்கள் தமது மெஞ்ஞான திருப்பாடலில் சொல்கிறார்கள்

சொல்லால் பொருளால் தூயவறிவால் கணக்கால்

வெல்லாத வுன்னை விரும்பி நிற்பதெந்நாளோ

அதாவது அல்லாஹ் தஆலாவுடைய ஸிபத்துகளை சொல்லைத் தொடுத்து வார்த்தையாடக் கூடியவைகளாலும்> அல்லது அர்த்தங்கள் விரித்து பல வேறு வகைகளாக வர்ணிப்பதாலும்> அறிவைக் கொண்டு நீள ஆலோசனை செய்வதாலும், அவனது குத்றத்தின் (சக்தியின்) மகிமையை பற்றி ஒன்றொன்றாய்ப் பிரித்து எண்ணி முடிப்பதாலும் யாருக்கும் இன்னது தான் இத்தன்மை தான் என்று ஒரு முடிவு அமையாத அல்லாஹ் தஆலாவுடைய ஸிபத்தை உணர்ந்து அவனளவில் மோகித்து சாதித்து நிற்பது எந்த நாளோ! என்று அவர்களது கலீஃபா நாயகங்கள் விளக்கம் சொல்கிறார்கள்!

அது போல், இன்னொரு இடத்தில், அப்பா அவர்கள் சொல்கிறார்கள், இந்த காற்றெனும் பிராண வாய்வினால் நிரப்பப்பட்டு ஓடி நடமாடுகின்ற வினைக்கூடாகிய இந்த ஜடலத்தில்   அல்லாஹ் தஆலாவின் சிம்மாசனக் கொலுவாகிய நேத்திரக் (நெற்றி) கமலத்தின் நடுவே வைத்து அவனது ஹக்கு தய ஒளி வட்டத்தை இளஞ்சூரிய பிரகாசம் போல் கண்டு சந்தேகமறத் தரிசித்து ஆனந்த பரவசியாய் நான் அல்லாஹ் தஆலாவை வணங்கி நித்திய வாழ்வில் தரிபடுவது எந்த நாளோ!

இப்படியெல்லாம் சொன்ன அப்பா அவர்கள், கிட்டத்தட்ட பதிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காணகத்தில் கடுந்தவம் புரிந்திருக்கிறார்கள். அவர்களது ஆன்மீக பலமானது கற்பனைக்கு எட்டாத விஷயம். அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் விரிப்பது மணல்களை எண்ணுவது போல் நம்மால் சாத்தியமற்றது.

அப்பா அவர்களின் ‘அல்லஃபல் அலிஃப்’ பைத் ஒரு ஞான சமுத்திரம். அது, இலக்கணத்தை – சொல்லழகை – கருத்தாழத்தை – ஞானமுத்துக்களை கொண்டது. இவற்றில் ஒன்றை பார்ப்பவர் வேறு ஒன்றை கானமாட்டார், எல்லாவற்றையும் பொதிந்த இந்த பைத்தில் அப்பா அவர்கள், உலகையே கட்டிப்பிடித்து அதுவே சகலமும் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கும், இருந்தாலும் அப்பா அவர்களை உள்ளத்தால் உகந்து மிக மரியாதையாக அவர்களைப் பார்க்கும் நம்மை போன்ற பலகீனமானவர்களுக்கு ஒரு கருத்து சொல்வார்கள்,

ذَرْعِيَالًا ذَالْهَوٰى مَعَ الْاَحِبَّا بِالنَّوٰى

ذُدْعَنِ الْقَلْبِ الْهَوٰى وَاتْرُكْ مٍنَ الْاَنْذَالِ ذَالْ

தர் யியாலன் தல்ஹவா மஃஅல் அஹிப்ப பின்னவா

துத் அனில் கல்பில் ஹவா வத்ருக் மினல் அன்தாலி தால்

பொருள் : (இறை) நேசர்களுடன் அன்பு கொண்டவனே! (மனதளவில்) இடம்பெயர்த்தல் (பிரிதல்) மூலம் உன் குடும்பத்தாரை விட்டு விடு. உள்ளத்தை விட்டும் மனோ இச்சையை தடுத்து விடு. மட்டமானவர்களில் நின்றும் முந்தானையை விட்டு விடு. : “தர் யியாலன் தல்ஹவா மஃஅல் அஹிப்ப” என்பதற்கு (உலக) மாயை உடையவனே (மனதளவில்) பிரிவது கொண்டு குடும்பத்தாரையும் கூட்டாளிமாரையும் விட்டுவிடு என்றும் பொருள் கொள்ளலாம்.

விளக்கம் : இவ்வுலக மாயையில் சிக்கித்தவிக்கும் என்அருமை மகனே! திரும்பவும் உனக்கு ஒன்று சொல்கிறேன். உன் குடும்பத்தாரையும் கூட்டாளிமார்களையும் விட்டு (மனதளவில்) இடம் பெயர்ந்து விடு. மேலும் போலி ஷைகுமார்களிடமிருந்து பைஅத் எடுப்பதை தவிர்த்துக் கொண்டு நல்ல ஷைகுமார்களின் திருச்சன்னிதியில் அடைக்கலம் புகுந்தவனாய் இருந்து வருவாயாக.

நமது ஷைகுனா அப்பா அவர்கள் இந்தக் கவியில் கல்வத்தை மேற்கொள்ளுமாறு குறிப்பிடுகிறார்கள். கல்வத் என்பது இறைவனுடைய நினைவைத் தவிர்த்து மற்ற எந்த வஸ்துவின் நினைப்பிலும் நம் இதயம் சென்றுவிடாமல் அதைப் பக்குவப்படுத்துவதற்கு நம்முடன் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து சிறிது காலம் தனி இடத்தில் ஒதுங்கி இருந்து இறை தியானிப்பில் ஈடுபதுவதர்க்கு கல்வத் எனப்படும். கல்வத் என்பது இறைவன் விஷேசமாக அருளுகின்ற வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஏனெனில் அவன் யாரை கல்வத்துக்கு தெரிவுசெய்திருக்கிறானோ அவர்கள்தான் கல்வத்தை அனுஷ்டிக்க முடியுமே தவிர எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றல்ல! அதற்கு முன்னால் ஒரு காமிலான ஷெய்குடைய சகவாசத்தில் இருந்து பின் அவர்களின் உத்தரவின் பேரில் தான் கல்வத்தை மேற்கொள்ளவேண்டும்!

மேற்சொன்ன அப்பா அவர்களின் ‘அல்லஃபல் அலிஃப்’ பைத்தின் விளக்க நூல், நமது கௌதனா ஷெய்கனா அம்பா நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் உத்தரவின் பேரில், அவர்களின் சீடராகிய ஜவாஹிர் உஸ்தாத் அவர்களால் கோர்வை செய்யப்பட்டதிலிருந்து எடுக்கப்பட்டது! இதனை நமது சகோதரர் ஒருவர் kayalislam.com என்ற வலை தலத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்கள். மேற்கொண்டு விவரங்களை அறிய விரும்புவோர்கள் அதை பார்த்து கொள்ளவும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்….

Related Posts