UPCOMING EVENTS

முன்னோர்கள் – பகுதி 1

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிருனும் மேலாக நேசித்த நம் முன்னோர்களை பின்பற்றினால் வெற்றி நிச்சயம்…

தலைப்பு அருமை. இதற்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் இந்த நஜ்த் முனாஃபிக்குகளை விரட்டி விடலாமே என்று நீங்கள் நினைப்பீர்கள்! அவர்கள் ஆருயிர் நபியை நேசித்து வாழ்ந்த வாழ்க்கையே வெற்றிக்கு ஆதாரம்! இன்ஷா அல்லாஹ் மேல் விவரங்களை தருவோம்…

நம் அன்பிற்கினிய அஹ்லு ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மக்களுக்காக இதை பதிவிடுகிறோம்…

முன்னோர்கள் இரண்டு வகை.

ஒன்று ஸாலிஹீன்களாக வாழ்ந்து மறைந்து வெற்றி பெற்றவர்கள்…

இரண்டாவது, இணைவைத்து தோல்வியுற்றவர்கள்…

அந்த இரண்டு வகையினருக்கும் நாம் ஆதாரம் தருவோம் குர்ஆன் ஷரீஃபிலிருந்தே.

முதலில் தோல்வியுற்றவர்களை பற்றி பார்ப்போம்.

சூரா ஸஃபா 34:43ல் இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்” என்று வருகிறது

இதிலிருந்து நாம் விளங்குவது, இவர்கள்…

‘சாதாரண மனிதர்’ என்று நம்முடைய நாயகத்தை அவமதித்தவர்கள்,    இணைவைத்த தம் முன்னோர்களை பின்பற்றியவர்கள்,

நபிமார்களை மதிக்காது வாழ்ந்த அக்காலத்து காஃபிர்கள்

என்று தெளிவாக புரிய முடியும்.

அடுத்து சூரா பகரா 2 : 170ல் வரும் ஆயத் சொல்கிறது,     “அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?”

இந்த ஆயத் அஹ்லுல் ஃபித்ரத், அதாவது நுபுவ்வத்திற்கு முன், காலத்தில் வாழ்ந்த முன்னோர்களை பின்பற்றியவர்கள் பற்றியது என்று விரிவுரையாளர்கள் சொல்கிறார்கள். நேர்வழி இது தான் என்ற ஞானம் கிடைக்காததால் அந்த முன்னோர்கள் இணைவைத்தார்கள், என்று அந்த பித்ரத் காலத்தில் வாழ்ந்தவர்களை குறித்து சொல்லிவிட்டு, பின் வந்தவர்களை பார்த்து, உங்களுக்கு அப்படியல்ல, இதோ இறைதூதர் – இறைவேதம் இருக்கிறது என்று இந்த ஆயத் தெளிவாக குறிப்பிடுகிறது!

இந்த இரண்டு ஆயத்துகளும் இணைவைத்து தோல்வியுற்ற முன்னோர்கள் பற்றிய ஆயத்துகளாகும்

இனி ஸாலிஹீன்களாக வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் பற்றியது பற்றி பார்ப்போம்…

 சூரா யூசுஃப் ஷரீஃப் 12 : 36-38ல் வரும் ஆயத், கொஞ்சம் கவனித்து புரிய முற்படுங்கள் அன்பானவர்களே!

யூசுஃப் நபி சிறையிலிருக்கும் போது இரண்டு வாலிபர்கள் தாம் கணவு கண்ட விஷயத்தை அவர்களிடம் சொல்லிவிட்டு,உங்களை பார்த்தால் ஞானமுள்ளவராக தெரிகிறீர்கள், இதற்கு விளக்கம் தாருங்கள் என்று வேண்டி நின்றார்கள். யூசுஃப் நபி அவர்கள் அந்த கணவுக்கு விளக்கம் சொல்வதாக சொல்லிவிட்டு ஒரு வார்த்தையை சொல்கிறார்கள் “இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை;” 12:37 அலைஹிஸ்ஸலாம் அலா நபிய்யினா அஜ்மஈன்!

அதாவது அல்லாஹ்வே அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததாக சொல்லும் யூசுஃப் நபி அவர்கள் தான் எந்த மார்க்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லும்போது

“நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்;” மில்லத்த ஆபாயீ என்ற வார்த்தையின் அழுத்தம் மிக சிரேஷ்டமானது. கூறுவது சாதாரண ஆள் அல்ல ஒரு நபி – அல்லாஹ் தஆலாவிடத்திலிருந்து சதாவும் வஹீ அருளப்பட்டு கொண்டிருப்பவர்கள் – சிறு வயதிலிருந்தே ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் தொடர்புள்ளவர்கள், அப்படியிருந்தும் அவர்கள், எனது பாட்டனார் சத்திய சீலர் இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள், அவர்கள் மகனான இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் – அவர்களின் மகனான யஃகூப் அலைஹிஸ்ஸலாம் ஆகிய முன்னோர்களின் மார்க்கத்தை தான் நான் பின்பற்றுகிறேன் என்று சொல்வதை சிந்தித்து பார்க்கவேண்டும்!

ஆக இந்த ஆயத்தின் மூலம் முன்னோர்களான ஸாலிஹீன்களை பின்பற்றவேண்டும் என்று தெளிவாக புரிகிறது.

அடுத்து இன்னொரு ஆயத்,   நம்முடைய வெற்றிக்கு வழி நடத்தி செல்லும் இந்த ஒரு ஆயத்தை பற்றி பிடித்துக்கொண்டால் போதுமானது.

சூரா தூர் ஷரீஃபில் 52:21 வது ஆயத்தில்…

“எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களு(முன்னோர்களு)டைய  செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம்” என்று தெளிவாக வருகிறது.

தொடர்ந்து வரும் ஆயத்களில் சுவனத்தில் அத்தையவர்களுக்கு வழங்கப்படும் நிஃமத்துகளை பற்றி சொல்கிறான்.

நாமும் அதையே சொல்கிறோம் முன்னோர்களான அந்த நாதாக்கள், எந்த ஈமானில் இருந்தார்களோ அதையே பற்றிப்பிடித்து கொள்வோம்! நாகூரின் அரசர் குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீது நாயகம், இமாம் ஸதக்கத்துல்லாஹ் அப்பா, உமருல் காஹிரி மௌலானா, ஜிஃப்ரி தங்கள் மௌலானா, ஷெய்கு உஸ்மான அப்பா, கல்வத் நாயகம், இன்னும் இது போன்ற உன்னதமான நாதாக்கள் ரழியல்லாஹு தஆலா அன்ஹும் அஜ்மஈன் அவர்கள் எந்த நம்பிக்கையில் இருந்தார்களோ அதே நம்பிக்கையில் நாமும் இருந்தால் அவர்களுடனே அல்லாஹ் தஆலா நம்மை சேர்த்து வைப்பான் என்பதில் சிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இன்னும், அப்படி சேர்த்து வைப்பதால் அந்த நாதாக்களின் நன்மைகளில் எதையும் குறைத்து விட மாட்டோம் என்று சொல்வதையும் பார்க்கும்போது, அமலை விட ஈமான் தான் முக்கியம் என்பதும் புரிகிறது.

எனவே சகோதரர்களே இதை மனதில் கொண்டு வழிகெடுக்க வரும் குழப்பவாதிளை விட்டும் தவிர்ந்துகொள்வோம்! உன்னத நாதாக்களான முன்னோர்களின் வழியில் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் அல்லாஹ் தஆலா ஆக்கிவைப்பானாக! ஆமீன்!

வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!

Related Posts