UPCOMING EVENTS

ஸெய்யிதினா ஸித்தீக்குல் அக்பர் ரழியல்லாஹு தஆலா அன்ஹூ

ஜமாதுல் ஆகிர் பிறை 22. ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முதல் கலீஃபாவான ஸெய்யிதினா ஸித்தீக்குல் அக்பர் ரழியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் உரூஸ் முபாரக். அன்னவர்களின் வாழ்க்கையிலிருந்து சில குறிப்புகள்…

அவர்களின் இயற்பெயர் பெயர் அப்துல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு.

அவர்கள் ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட இரண்டு வயது இளையவரும், பால்ய தோழரும் ஆவார்கள்.

ஸித்தீக்குல் அக்பர் ரழியல்லாஹு தஆலா அன்ஹூ ஆண்களில் பெரியவர்களில் ஈமான் கொண்டவர்களில் முதலாமானவர்கள். அலி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு இளைஞர்களில் முதலாமானவர்கள்.

எதிரியின் கொடுமைக்கும் வேதனைக்கும் ஆளான, அடிமையான பிலால் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை பெரிய தொகை கொடுத்து வாங்கி உரிமை விட்டதால் அவர்களுக்கு ‘அதீக்குர்ரஹ்மான்’ என்ற காரணப்பெயரும் உண்டு.

வெளியூருக்கு சென்று திரும்பிய அவர்கள், அல்லாஹ் தஆலாவின் ஹபீப் அவர்களின் மிஃராஜ் பயண விஷயத்தை அல்லாஹ் தஆலாவின் எதிரியின் வாயிலிருந்து கேட்ட போது, ‘அல்லாஹ்வின் ஹபீப் சொல்லியிருந்தால் சத்தியமாக அது சத்தியமே’ என்று உண்மைபடுத்தியதால் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே ‘ஸித்தீக்’ என்று அழைக்கப்பட்டவர்கள்!

குறைஷிக்காபிர்கள், ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றும் குடும்பத்துடன் வியாபார மற்றும் கொடுக்கல் வாங்கலுக்கு தடை செய்திருந்து தனிமை படுத்திய போது, ஸித்தீக்குல் அக்பர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தைரியமாக அன்னவர்களோடு பகிரங்கமாக கொடுக்கல் வாங்கல், செய்தார்கள், இன்னும் பல உதவிகளை பகிரங்கமாகவே செய்தார்கள்.

ஹிஜ்ரத்தின் போது ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சென்றவர்கள் இவர்கள் மட்டுமே! குகையிலும் தோழராக இருந்த அவர்களை அல்லாஹ் தஆலா ‘ஸாஹிப்’ என்று அழைத்தான். எனவே அவர்கள் ‘ஸாஹிபி ஃபில் ஃகார்’ என்றழைக்கப்பட்டார்கள்.

மதீனா ஷரீஃபில் மஸ்ஜிதுன்னபவி கட்டப்பட்டபோது இவர்களே அதன் முழுதொகையை கொடுத்து அல்லாஹ்வின் ஹபீபுக்கு காணிக்கை செய்தார்கள்.

ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நம்பிராட்டிமார்களில் கன்னியாக இருந்த ஒரே நபர் ஆயிஷா உம்மா ரழியல்லாஹு தஆலா அன்ஹா. எனவே கன்னியின் தந்தை என்று பொருள் படும் அபீபக்ர் என்றழைக்கப்பட்டார்கள்.

‘ஸாலிஹுல் முஃமினீன்’ எனும் குர்ஆன் ஷரீஃபின் வசனம் இவர்களையே குறித்தே இறங்கியதாகும்.

ஸித்தீக்குல் அக்பர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஈமானை ஒரு தட்டிலும் முஃமின்கள் அனைவரின் ஈமானை மறு தட்டிலும் வைத்தால், இவர்களது ஈமானின் உறுதியே மிஞ்சி நிற்கும் என்று ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்டவர்கள்.

இதற்கு சான்றாக, உமர் கத்தாப் நாயக ரழியல்லாஹு தஆலா அன்ஹு ஒரு முறை, ஸித்தீக் நாயகம் அவர்கள் (ஹிஜ்ரத்) செய்த அந்த ஒரு நாளின் நன்மைக்கு பகரமாக நான் எனது வாழ் நாள் முழுதும் செய்த நன்மையை கொடுத்தாலும் ஈடாகாது என்று சொன்னதிலிருந்து அமல்களின் தராதரம் அமல் செய்பவரின் ஈமானின் உறுதியை கொண்டுதான் உணரமுடிகிறது. சுப்ஹானல்லாஹ்.

எனது மறைவிற்கு பின், சூரியன், அபூபக்ர் அவர்களை விட மிகச்சிறந்த மனிதர் மீது உதிப்பதில்லை என்று , ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் நபிமார்களுக்குப் பிறகு சிறந்த மனிதர் என்று புகழப்பெற்றவர்கள்.

அவர்கள் மறைந்த பின் அவர்களின் வேண்டுதலுக்கினங்க, அவர்களின் உடலை குளிப்பாட்டி, கஃபனிட்டு நபிகளாரின் ரவ்ழாவிற்கு முன்னால் ஸஹாபாக்கள் வைத்தார்கள். ஹபீபை ஹபீப் இருக்கும் இடத்தில் நுழையுங்கள் என்று அசிரீரியாக வந்த உத்தரவை ஸஹாபாக்கள் கேட்ட பின்னரே ரவ்ழாஷரீஃபில் அடக்கம் செய்தார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடல் நலம் குன்றி இருக்கும் காலத்தில் கிட்டத்தட்ட 27 முறை இமாமத் செய்திருக்கிறார்கள். ஒரு முறை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பின் தொடர்ந்து தொழுது இருக்கிறார்கள்.

(மக்காவெற்றிக்கு) முன்னர் இஸ்லாத்திற்காக அன்னல் நபியிடம் வழங்கப்பட்ட ஒரு கை அரிசிக்கு பகரமாக, (மக்கா வெற்றிக்கு) பின் உஹது மலையளவு அரிசி வழங்கப்பட்டாலும் ஈடாகாது என்பது நபிமொழியாகும். இப்படியிருந்தும், ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், யாரெல்லாம் எனக்கு உபகாரம் செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் அதற்கு மேலாக பிரதி உபகாரம் செய்து விட்டேன். அபூபக்ர் அவர்களை தவிர. அவர்களுக்கு அல்லாஹ்விடமே பொருப்பு சாட்டிவிட்டேன் என்று நெஞ்சுருக கூறினார்கள் என்றால், இதற்கு மேல் அவர்கள் கீர்த்தியை சொல்ல இயலாது.

அவர்களைக் கொண்டு அல்லாஹ் தஆலாவிடம் கேட்டால் மறுக்கப்படாது என்பது உறுதி. நம்பிக்கையுடையவர்களான நம் அனைவரையும் அவர்களைக் கொண்டு இம்மை மறுமையின் நல்பேரு பெற்ற கூட்டத்தில் ஆக்கியருள்வானாக! ஆமீன்! ஆமீன்!! வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!!!

அன்னவர்களை பற்றிய சொற்பொழிவு தொகுப்புகள்:



நன்றி; முஹ்யித்தீன் டீவி.காம்

Related Posts