முஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
- 27-09-2016
- Aqida - Doctrines
இமாமுனா ஷாஃபி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்:
ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்களான அஹ்லுபைத்துளே!
(கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை தமது மகளாரான ஃபாத்திமா நாயகி, இமாமே ஹைதர் அலி நாயகம், அவர்களது இரு குழந்தைகள் இமாமுனா ஹஸன் இமாமுனா ஹுஸைன் ஆகியோர்களை போர்வையால் போர்த்திக்கொண்டு இவர்கள் எனது அஹ்லுபைத்துகள் என்று சொன்னார்கள். இவர்களின் வாரிசுகள் தாம் ஸெய்யிது – ஷரீஃப் என்று சொல்லப்படுகிறது. அவர்களை குறித்து தான் இந்த கஸீதா)
உங்களை நேசிப்பது அல்லாஹ் தஆலா இறக்கி வைத்த உன்னத குர்ஆன் வேதத்தை கொண்டே கடமையாக்கப்பட்டுவிட்டது!
(இஸ்லாத்தின் சில விஷயங்கள் ஹதீஸ்களின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் தங்கம் அணியக்கூடாது, பட்டு அணியக்கூடாது போன்ற விஷயங்கள், ஹதீஸ் ஷரீஃபை கொண்டு தான் தடை (ஹராம்) செய்யப்பட்டுள்ளது. குர்ஆன் ஷரீஃபில் வெளிப்படையாக வரவில்லை. ஆனால் நமது ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரத்த பந்த உறவுகளிடம் நேசம் – பாசம் பாராட்டுவது குர்ஆன் ஷரீஃபை கொண்டே கடமையாக்கப்பட்டுள்ளது. சூரா ஷூறாவில் 42:23ல் (ஹபீபே) சொல்லுங்கள்: “நெருங்கிய பந்தங்களின் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” ‘இதற்காக’ என்ற வார்த்தைக்கு மிக நீண்ட விளக்கங்கள் இருக்கின்றது. இந்த சன்மார்க்கத்தை கொண்டு நம்மிடம் சேர்த்ததற்காக அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் எப்படி கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள என்பதை இங்கு அவதானிக்கவும்)
இப்படி உங்களுக்காக ஒர் மகத்துவமிக்க வலுப்பமிக்க (வேத) விதியினை ஏற்படுத்தி வைத்திருப்பதே உங்களுக்கு மிக போதுமானதாகும்.
(இந்த புனித குடும்பத்தோடு கண்ணியமாகவும் நேசத்தோடும் நாம் நடக்க வேண்டும் என்று ஆண்டவன் ஏற்படுத்தி விட்டானே அந்த ஒரு விதியே அவர்களை மரியாதை செய்ய போதுமாகிவிட்டது. அதற்கு மேலும் அவர் ஹாஃபிழா? ஆலிமா? ஓதியிருக்கிறாரா? அப்படி இருக்கிறாரா? என்று அடுக்க வேண்டாம்! அல்லாஹ் தஆலா ஏவிய அந்த விஷயத்தை நாம் செய்தாக வேண்டும். அதே போல் அஹ்லுபைத்துகளுக்கு, நாம் படிக்கவில்லையே! நாம் செல்வாக்கோடு இல்லையே! அமைச்சராக இல்லையே என்ற கவலை கொள்ள வேண்டாம்! அல்லாஹ் தஆலா உங்களுக்கு ஏற்படுத்திய அந்த மரியாதையே உங்களுக்கு மகத்துவமானது! போதுமானது!)
யார் உங்கள் மீது ஸலவாத்து சொல்லவில்லையோ அவருக்கு தொழுகையே இல்லை!
நாம் தொழுகையின் இறுதியில், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மது’ என்று சொல்லவேண்டும். அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மது என்று சொல்லிவிட்டு நிறுத்திவிட்டால், அதாவது “வஆலி முஹம்மது – முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் ஸலவாத்து சொல்வாயாக” என்று சேர்த்து சொல்லாதவனின் தொழுகை தொழுகையே இல்லை!
அந்த புனிதத்தின் பேரரசர் பூமாம் முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களின் வாரிசுகளான அஹ்லுபத்துகளையும் நேசித்து ஈருலக வாழ்வில் வெற்றி கண்ட கூட்டத்தினரில், நம்மையும் நம்மை ஈன்ற மாதா – பிதாவையும், நமது சந்ததிகளையும் சேர்த்தருள்வானாக! ஆமீன்!