முஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
- 27-09-2016
- Aqida - Doctrines
சற்று நீண்ட உரைதான் ஆனால் மகத்துவமிக்க அந்த இரவின் அளவுக்கு நீளமல்ல… படியுங்கள்…புரியுங்கள்…பரப்புங்கள்…
இன்னும் சில தினங்களில் இந்த புனித ரமழான் நம்மை விட்டும் விடைபெற்று செல்லவிருக்கின்ற நிலையில் லைலத்துல் கத்ர் எனும் இரவை இதோ எதிர்பார்த்தவன்னம் இருக்கின்றோம்.
இந்த உம்மத்தை சேர்ந்தவர்களின் வாழ்நாள் முந்திய உம்மத்துகளை விட மிக குறைந்ததாக இருக்கின்றது.அதாவது அறுபதுக்கும் எழுபதுக்குமிடையே மறைந்து விடுவார்கள்.எனவே அல்லாஹ் தஆலா தனது கொடையை கொண்டு சின்ன செயலாக இருப்பினும் அதன் நன்மைகளை அதிகப்படுத்தியிருக்கிறான் என்று ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளர்கள்.
அத்தகையதில் மிகவும் சிறப்பான ஒர் இரவுதான் லைலத்துல் கத்ர் இரவாகும். திருமைறையில் லைலத்துல் கத்ர் இரவு பற்றியே ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் தஆலா அருளியிருக்கிறான். அந்த அருள்மறை அத்தியாத்திலே, இந்த இரவில் தான் அருள்மறை இறங்கியது என்று உறுதிப்படுத்துகின்றான்.அதன் மகத்துவத்தை பற்றி சொல்லும்போது இந்த இரவு ஆயிரம் மாதங்களுக்கு சமம் என்று சொல்லவில்லை ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று சொல்கிறான். எனவே இதன் யதார்த்தமான மகத்துவத்தை அல்லாஹ்வும் அவனது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தான் அறிவார்கள் என்று அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் ஏகோபித்த முடிவாகும்.
இன்னும் இந்த ரமழான் ஷரீஃப் விடைபெற்று சென்றாலும் அந்த அத்தியாயத்திற்கு ஒரு தனி மகிமையை வைத்திருக்கின்றான். அதாவது, ஒளு செய்தவுடன் இன்னா அன்ஜல்னாஹு லைலத்துல் கத்ர் என்ற சூராவை ஓதிடின், ஒரு வருடம் பகலெல்லாம் நோன்பிருந்து, இரவெல்லாம் விழித்திருந்து வணக்கம் செய்த நன்மை கிடைக்கிறது என்று ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவாய் மலர்ந்தருளியுள்ளதாக ஸஹீஹான கிரந்தங்களில் பார்க்கமுடியும்.
சிந்தித்து பார்க்கவேண்டும், இந்த லைலத்துல் கத்ர் இரவு, குர்ஆன் ஷரீஃப் இந்த உம்மத்திற்கு அருளப்பட்ட ஆரம்பதினமாக இருக்கின்றது. அதாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக பிரகடனப்படுத்தப்பட்ட இரவு தான் லைலத்துல் கத்ர். முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்று உலகம் கணித்து கொண்டிருந்த அப்துல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனார் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ‘முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ்வின் ரஸூல் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)’ என்று பிரகடனப்படுத்தப்பட்ட இரவு தான் அது.
அடுத்து, இந்த ரமழானில் மக்கள் மக்காவை நோக்கி செல்வதை பார்க்கின்றோம். இங்கு அடிக்கும் வெயிலை விட அங்கு மிக அதிகம் இருப்பினும் செல்கிறார்கள். காரணம் மற்ற இடங்களில் தொழும் ஒரு தொழுகையை விட மக்கா ஹரம்ஷரீஃபில் ஒரு லட்சம் நன்மைகள் அதிகம், அது போல் ஒரு நோன்பிற்கு ஒரு லட்சம் நோன்பின் நன்மை கிடைக்கின்றது. இந்த மக்காவை பற்றி தனது திருமறையில் (95:3) அல்லாஹ் தஆலா, நம்பிக்கைக்குரிய நாயகத்தின் இந்த மக்கமா நகரத்தின் மீதும் சத்தியமாக…என்று சொல்கிறான்.
சிந்திக்கவேண்டும்,
நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபியாக பிரகடனப்படுத்தப்பட்ட இரவு, ஏனைய இரவுகளை விட – ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாக ஏற்றுக்கொள்கிறார்கள்,
நம் ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த புன்னிய பூமி, பலதுல் அமீன், நம்பிக்கைக்குரிய அந்த நாயகத்தின் பட்டணம் ஏனைய தலங்களை விட லட்சம் மடங்கு சிறப்புக்குரியதாக ஏற்றுக்கொள்கிறார்கள்,
ஆனால் அந்த ரஸூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாதாரன மனிதர் தான் என்று, தானும் கெட்டு பிறரை வழிகெடுக்கும் ஞான சூன்ய பித்தர்கள், அற்பர்கள் புலம்புகின்றனர். இந்த மூடர்கள் சொல்வதை குப்பையில் வீசி விட்டு, படைத்த நாயன் அல்லாஹ் தஆலா சொல்வதை பார்ப்போம் 94:4. மேலும் (ஹபீபே) நாம் உங்களுக்காக உங்களது புகழை கீர்த்தியை உயர்த்திவிட்டோம்…என்று. சிந்தித்து பார்க்கவேண்டும்.
பலரை சில நாள் ஏமாற்றலாம், சிலரை பல நாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது. இதை ஏன் சொல்கிறோம் என்றால், அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக பிரகடனப்படுத்திய இரவே ஆயிரம் மாதங்களை விட மகா உன்னதமானது என்று சொன்னால், பிரகடனப்படுத்தப்பட்ட அவர்களின் சிறப்பை என்னவென்று சொல்வது!
இப்பொழுது வைத்துக்கொள்வோம், இந்த லைலத்துல் கத்ர் உடைய இரவின் நீளம் 625 நிமிடம் அ 37500 நொடி என்று வைத்துக்கொள்வோம்,
அப்படியென்றால் இந்த இரவின் ஒரு நொடி மற்ற நாட்களிலே 19 மணி நேரத்தை விட உன்னதமாக இருக்கின்றது!
லைலத்துல் கத்ர் உடைய ஒரு நிமிடம் மற்ற மாதங்களில் உள்ள 48 நாட்களை விட உன்னதமாக இருக்கின்றது!
லைலத்துல் கத்ர் உடைய இரவில் ஒரு மணி நேரம் நாம் நின்று தொழும் தராவீஹ் தொழுகை அல்லது வணக்கம், மற்ற காலத்தில் 8 வருடம் 9 மாதங்கள் வணக்கத்தை விட மேலாக இருக்கின்றது!
சிந்திக்க வேண்டும், லைலத்துல் கத்ர் இரவுக்கு முந்திய அல்லது பிந்திய மற்ற இரவுகளும் ஒரு நிமிடம் முன் பின்னாக கூட இல்லாமல் அதே நீளத்தில் இருந்தாலும், சீதோஷ்ன நிலைகளில் மாறுபடாமல் இருந்தாலும், நம் பார்வைக்கு ஒன்று போல் தெரிந்தாலும், அல்லாஹ்விடத்தில் அந்த லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புகுரியதாக இருக்கின்றது. காரணம் அவனது ஹபீப் , எம்பெருமானார் முஹம்மதுர்ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களுக்கு ‘நுபுவ்வ்த் எனும் நபித்துவத்தை பிரகடனப்படுத்தப்பட அந்த இரவைத்தான் தெரிவு செய்தான் என்பதால் இவ்வளவு சிறப்பு பெற்றதாக இருக்கின்றது.
இன்னும் ஆழமாக சிந்தித்து பார்ப்போம்,
சிலர், எம்பெருமானார் முஹம்மதுர்ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் சராசரி அரசியல் தலைவரைப்போல் கருதி வருகின்றனர். அதாவது ஆமினா – அப்துல்லாஹ் தம்பதியினருக்கு மகனாக பிறந்து, நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் கிடைத்து, 23 வருடம் மார்க்க சேவை செய்து மறைந்து விட்டார்கள் என்பது போல சித்தரிக்க முயல்கின்றனர்.
அரசியல் தலைவர்களுக்கும் ஆன்மீக தலைவர்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. எப்படி என்று சிந்திப்போமேயானால், உலகத்தலைவர்கள் அழிந்து போகும் இந்த உலகத்தில் நாம் சிறப்பாக வாழ வேண்டி, நூறு இருநூறு என்று வைத்து கொண்டாலும் நாம் நலமாக வாழ வேண்டி, தமது அருள் – பொருள் – உயிரை தியாகங்கள் செய்கின்றனர்.
ஆன்மீக தலைவர்கள் அப்படியல்ல, அவர்களின் தொண்டு, அவர்கள் காட்டித்தந்த நெறி, நாம் வாழும் போது மட்டுமல்ல, நாம் மரணித்த பின்னரும் வாழும் நித்திய வாழ்வும் சிறப்புற்றதாக இருக்க வேண்டி அவர்களின் தியாகங்கள் உள்ளது. இமாம் கஜ்ஜாலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மறுமையின் வாழ்வை குறித்து ஒரு உதாரனம் சொல்வார்கள்…
இந்த உலகம் முழுதும் மண்ணிற்கு பதிலாக அதே போன்று கடுகை, கசகசா அல்லது ஒரு தாணியத்தை பரப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு குருவி ஒரு கடுகை எடுத்து தின்னுகிறது,அப்படி ஒரு கடுகை தின்றால் நூறு ஆண்டுகள் அதன் பசியை அல்லாஹ் நீக்கிவிடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். இப்படியாக நூறாண்டுக்கு ஒரு முறை அது ஒரு கடுகை தின்று கொண்டிருக்கிறது என்றால் உலகம் முழுதும் பரப்பப்பட்டுள்ள கடுகு தீர்ந்து விடும் ஆனால் மறுமை நாளின் ஒடுக்கம் நித்தியமானது , நிரந்தரமானது!
நிரந்தரமான அந்த மறுமை வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்கித்தர வந்த மஹான்கள் – நபிமார்கள் – எல்லாரும் தமது மண்ணறையிலே வாழ்கின்றார்கள், அவதானிக்கிறார்கள் என்பது தான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை. அவர்களுக்கெல்லாம் நாயகமாக வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் தான் அல்லாஹ் தஆலாவின் படைப்புகளிலேயே, அல்லாஹ்விற்கு ஒரு கணம் கூட மாறு செய்யாத மலக்குகள் உட்பட அனைவற்றையும் விட மிக உன்னதமானவர்கள். இன்னும் அல்லாஹ்வின் அர்ஷ் – குர்ஸி – லவ்ஹு கலம் எல்லாவற்றையும் விட எங்கள் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் மறைந்து வாழும் அந்த புனித தலம் மகா உன்னதமானது இது தான் ஸஹாபாக்கள் – தாபியீன்கள் – அவர்களை பின் தொடர்ந்த நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் – ஹதீஸ் கலை இமாம்கள், அவர்களை பின் பற்றும் நூறு கோடி முஸ்லிம்களின் முடிவாகும், அசைக்க முடியாத நம்பிக்கையாகும்!
குத்புல் அக்பர் வல் கௌதுல் அஷ்ஹர் ஷாதுலி நாயகத்தின் (ரழியல்லாஹு தஆலா அன்ஹு) அவர்களின் தரீக்காவில் வந்த இமாம் முஹம்மது இப்னு சுலைமான் அல்ஜஸூலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தமது தலாயிலுல் ஹைராத் ஸலவாத் கிரந்தத்திலே, செவ்வாய் கிழமை பாடத்தில், யா அல்லாஹ்! அந்த புனித பாதணிகளின் எஜமானரின் மீது ஸலவாத் சொல்வாயாக என்று சொல்கிறார்கள். எந்த பாதணிகள் தெரியுமா அது? அல்லாஹ் தஆலா தனது திவ்ய தரிசனத்தை தனது ஹபீபிற்கு அளித்தான் அல்லவா, அது சமயத்தில் ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் அர்ஷுக்கு மேலாய் தமது பாதணிகளுடன் ஏறி விட்டதை உணர்ந்தவர்களாய் அதை கழற்ற முற்பட்டபோது, அல்லாஹ் சொன்னான், ஹபீபே நம்மிடத்தில் உங்களுக்குத்தான் சிறப்பு, அது அர்ஷாக இருந்தாலும் உங்கள் செருப்பை விட கீழ் தான், அது போல் உம்மிடத்தில் உங்கள் கல்பில் என்னை தவிர வேறு எதற்கும் இடம் இல்லை என்றான்! சிந்திக்க வேண்டும் மூஸா நபி அவர்கள் அல்லாஹ்விடம் வசனிக்க ஆசைப்பட்ட பொழுது பரிசுத்த வாதில் முகத்தஸ் என்ற தலத்தில் ‘காலணியைக் கழற்றுக’ என்று கூறப்பட்டதுக்கு மாற்றமாக அவனது அர்ஷிலேயே காலணியுடன் சென்ற ஏந்தல் நபிகளின் புகழை சொல்லிமுடிக்க இயலாது.
லைலத்துல் கத்ர் பற்றியல்லவா பேசிவந்தோம் என்று யோசிக்கும் சகோதரர்களே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நமது பாட்டணார் மாதிஹுர்ரஸூல் ஷெய்கு இமாம் ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள், அஹ்மது நபியின் புகழ் பாடும் அந்த இரவு லைலத்துல் கத்ரின் இரவாகவே இருக்கின்றது என்று.
இந்த அழியும் துன்யாவின் பேச்சுக்களை விட்டு எப்பொழுது ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களவில், அவர்கள் சீர் – சிறப்பு, சீர் மிகும் பிறப்பு, அவர்களது ஏவல் –விலக்கல்கள், இன்னும் அவர்கள் சம்பந்தப்பட்ட பேச்சாக உங்கள் பேச்சு மாறும் அதே வேலையில் எழுவான் கடந்து அர்ஷ் – குர்ஸிக்கு அப்பால் உள்ள ‘மலயில் அஃலா’ என்று சொல்லப்படக்கூடிய அந்த மிகப்பெரிய திரைக்கு பின்னாலும் ‘அந்த பேச்சு’ செல்கின்றது. ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் தாஹா நபிக்கு எடுத்து வந்தவை அனைத்தும் அதற்கு பின்னாலிருந்துவந்த தல்லவா? எவரும் கடக்க முடியாத – கடந்திராத அந்த திரையை கடந்த நாயகமல்லவா நமது கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்! அவர்கள் சம்பந்தப்பட்ட பேச்சு அங்கே செல்வதில் ஆச்சர்யமென்ன?
சகோதரனே சிந்தித்து பார்! அறையின் ஒரு மூலையில் தனியாக அமர்ந்து பேசும் பேசும் ஒருவனின் பேச்சு ஒளிபரப்புசாதனம் வைக்கப்பட்டபின் ஒரு தொலைபேசியில் அவனது பேச்சை அந்த கருவியில் இணைத்தவுடன், அலைவரிசைகளின் மூலம் எட்டுத்திக்கும் செல்லவில்லையா? அது போல் அழியும் பாழ் உலகின் பேச்சை விட்டு, உயர்ந்து விட்ட அவர்களின் சொல் – செயல் – ஏவல் – விலக்கல் – சீர் – சிறப்பு என்ற பேச்சாக உனது பேச்சு மாறிவிடும் அதே நேரத்தில் ஆயிரமாயிரம் பல்லாயிரம் கோடி வருஷங்கள் பறந்தாலும் அடைய முடியாத அர்ஷின் அந்தப்புரமான மலயில் அஃலாவிலும் இந்த பேச்சு செவிமடுக்கப்படுகிறது என்று உணர்ந்து கொள்.
இவ்வாறான மகிமைகளுக்கெல்லாம் அடித்தலமாக அமைந்த, எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களின் சீர்மிகும் நபித்துவத்தை இந்த அகிலத்திற்கு பிரகனப்படுத்தப்பட்ட, இரவானதால் இந்த லைலத்துல் கத்ர் என்பது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று சூசகமாக அல்லாஹ் தனது திருமறையில் இந்த இரவை ஏற்றி புகழ்ந்தான்.
இந்த இரவைப்பற்றி வெளியாக்குவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார்களே கத்தாபுடைய மகனார் ஷைத்தான் நடு நடுங்கும் செம்மல் உமர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை நன்றி பாராட்டாமல் இருக்க முடியாது. பனீஇஸ்ரவேலர்களின் உம்மத்தில் உள்ள ஒரு முஃமினானவர்கள் பல்லாண்டுகளாக அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்பட்ட போது ஹழரத் உமர் அவர்கள் தான், நாயகமே எங்களது ஆயுட்காலமே அந்த அளவுக்கு இருக்காதே என்று ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டார்கள். அதன் பின் தான் இந்த இன்னா அன்ஜல்னாஹு சூரா இறங்கியது.
இந்த லைலத்துல் கத்ர் இரவை பிந்திய பத்தில் தேடிக்கொள்ளுங்கள் என்றும், ஒற்றை படை நாட்களில் தேடிக்கொள்ளுங்கள் என்றும், இன்னும் குறிப்பாக சில நாட்களை சொல்லி 24ல் தேடிக்கொள்ளுங்கள் என்றும், 27ல், 29ல் என்று ஷஃபீஉல் முத்னிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
எல்லாம் உண்மை தான். முடிந்துவிட்ட ஒரு விஷேசமான இல்லத்தின் நிகழ்வை ஒளிப்பதிவு செய்து, அந்த நிகழ்வை கானாத நெருங்கியவர்களுக்கு கான்பிப்பதில்லையா? அவன் அர்ஹமுர்ராஹிமீன், அவனது நெருக்கத்திற்குட்பட்ட மஹ்பூப்களுக்கு லைலத்துல் கத்ர் இரவாக ஆக்கி கொடுப்பதில் அவனுக்கு ஒரு சிரமமுமில்லை. இதிலும் தர்க்கம் புரிவார்கள் ஆனவம் மிகுந்த ஆது சமூகத்தின் வாரிசுகள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் மறந்துவிட்டர்களாம். மூடர்கள்! அல்லாஹ் சொல்கிறான் அருள்மறையில், 87:6. (ஹபீபே) நாம் உங்களுக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீங்கள் அதை மறக்கமாட்டீர்கள்-87:7. அல்லாஹ் நாடியதை அல்லாமல்…இதற்கு மேல் என்ன சொல்ல? லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி சொல்லவந்த போது இருவர் தர்க்கித்து கொண்டிருந்தார்கள். சொல்லியபின்னும் அவர்கள் தர்க்கத்தை தொடர்ந்தால் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை வீனடித்தவர்களாக ஆகி விடுவார்களோ எனது உம்மத்துக்கள் என்று அஞ்சினார்கள். அதனால் தான் ‘உயர்த்தப்பட்டு விட்டது’ என்று சொல்லிவிட்டார்கள். இனி ஒருவன் அந்த இரவில் வனக்கமே செய்யவில்லை என்றாலும், அவன் அதை அறியாத்ததினால் ரமழான் மாதத்தின் ஒரு இரவை வீனடித்துவிட்டதாகத் தான் எழுதப்படும். உம்மத்துகளின் மீது கருணை கொண்ட காருன்ய நபியல்லவா அவர்கள்!
யா அல்லாஹ் இந்த புனித இரவின் பரக்கத்தாலும், இந்த இரவின் நாயகர் ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களின் முகத்திற்காகவும், எங்களை இந்த சங்கையான ரமழானை கண்ணியப்படுத்திய கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக! இன்னும் இந்த சங்கையான ரமழான் ஆதரவாக சாட்சி சொல்பவர்களில் எங்களை ஆக்கிவைப்பாயாக! இன்னும், இந்த சங்கையான ரமழான் எதிராக சாட்சி சொல்லுமே அந்த கூட்டத்தில் எங்களையும் எங்கள் பெற்றோர்களையும் எங்கள் சந்ததிகளையும் ஆக்கிவிடாதே! யாருக்கு இந்த ரமழான் மாதம் வழக்காளியாக வருகிறதோ அவர்களுக்கு நான் ஷஃபாஅத் செய்யமாட்டேன் என்று தாயினும் கருணை கொண்ட காத்தமுன்னபி, உனது ஹபீப் எங்களது எஜமானர் ஷஃபீஉல் முத்னிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களே, சொன்னார்களே, அப்படிப்பட்ட துர்பாக்கிய கூட்டத்தில் எங்களையும் எங்கள் பெற்றோர்களையும் எங்கள் சந்ததிகளையும் ஆக்கிவிடாதே! உனது கருணையின் வடிவான ஷஃபீஉல் முத்னிபீன் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம் அவர்களைக்கொண்டே நாங்கள் கேட்கின்றோம் கபூல் செய்தருள்வாயாக! ஆமீன்!!
வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!