முஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
- 27-09-2016
- Aqida - Doctrines
ஒருவர், அல்லாஹ் தன் மீது அருளிய நிஃமதுக்காக அல்ஹம்துலில்லாஹ் என்று ஒருமுறை ஷுகூர் செய்தால் அவருடைய நன்றிக்கடனை நிறைவேற்றினவராவார். அவர் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்று இருமுறை சொன்னால் அதை நல்ல முறையில் நன்றி பாரட்டினவராவார். அவர் மூன்று முறை, அதாவது, அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவாரேயானால், அல்லாஹ் தஆலா, ‘இதோ என் அடியான், நான் இம்மையில் அருளிய சொற்ப நிஃமத்திற்காக என்னை மூன்று முறை புகழ்ந்ததினால், இவனுக்கு மறுமையில் இதை விட மேலான பாக்கியத்தை அருள்வதை என் மீது கடமையாக்கி கொண்டேன் என்று கூறுகிறான் என்று நாயகம் அவர்கள் சொல்கிறார்கள்.
வஹபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள், அல்லாஹுத்தஆலாவுடைய வேதங்களில் சிலதில் ஓதினேன். இப்லீஸ் அறவே அவனுடைய இபாதத்தில் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லவில்லை. அப்படி அவன் ஒரு தடைவ சொல்லியிருந்தால் அவன் வழி கெட மாட்டான் என்று சொன்னார்கள். மேலும் இமாம்கள் சொன்னார்கள் அல்ஹம்துலில்லாஹ் என்பது எட்டு ஹர்புகளாகும். சொர்க்கத்தின் வாசலும் எட்டாகும். ஒவ்வொரு வாசலையும் ஒவ்வொரு ஹர்பு திறக்கும்.
புகழ்வது என்பது நான்கு விதமாகும்.
1. அல்லாஹ் தன்னை புகழ்வது
இது எப்படியென்றால் அல்லாஹ் தன்னைப்பற்றி மறையில் சொல்கிறானே, மிக நேர்த்தியான படைப்பாளனாகிய அல்லாஹ் மிக உயர்ந்துவிட்டான்…இது போன்றதாகும்
2. அடியார்கள் அல்லாஹ்வை புகழ்வது
நாம் சொல்கிறோமல்லவா, அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று அது போல்…
3. அல்லாஹ் அடியாரை புகழ்வது
இதுவாகிறது, யூசுஃப் நபி அவர்களை சத்தியசீலர் என்று (ஸத்தீகன்) அல்லாஹ் சொல்கிறான் அல்லவா? அய்யூப் நபி பொறுமையாளர் என்றும் நூஹ் நபி நன்றியுள்ள அடியார் என்றும், எங்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சகல நலவுகளும் பொதிந்த உன்னதமான குணத்தின் மீது இருக்கின்றீர்கள் என்று அல்லாஹ் அடியார்களை புகழ்கிறான் அல்லவா? அது போல!
4. அடியார்கள் அடியாரை புகழ்வது
நாம் பல சமயங்களில் இவர் நல்ல மனிதர், இவர் ஒரு கொடையாளி இது போல சொல்வது. இன்னும், நாம் வைத்திருக்கும் ஒரு பொருளை – செல்ஃபோனை ஒருத்தர் புகழ்ந்தால், அது யதார்தத்தில் அதை தயாரித்த அந்த நிறுவனைத்தை புகழ்வதாகும். அது போல் அடியார் அடியாரை புகழ்ந்தால் யதார்தத்தில் அது படைத்தவனான அல்லாஹ்வையே புகழ்வதாகும். ஆக அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்வது மேற்கூறப்பட்ட அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்பதாகும் என்று இமாம்கள் விளக்கம் தருகிறார்கள்.
நமது குருநாதர் கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள், தவதிலிருக்கும் போது சரியான தாகமெடுத்த போது, திடீரென மழைபெய்து மேலிருந்து தங்க தட்டில், வெள்ளிக்கூஜாவில் இறங்கியது. பின் அசிரீரியாக , அப்துல் காதிரே உங்கள் நாம் மிகவும் மெச்சினோம், உங்கள் தவத்தை ஏற்றுக்கொண்டோம், எனவே உமக்கு தடுக்க(ஹராமாக்க)ப்பட்ட்தெல்லாம் ஹலாலாக்கி வைத்தோம் என்று சப்தம் வந்தது.
உடனே எஜமான் அவர்கள், அடே இப்லீஸ் மல்ஊனே, அல்லாஹ் தஆலா அகிலத்தை படைத்து எனது பாட்டனார் அவர்களை இறுதி நபியாக்கிவைத்து எது ஹலால் – அது ஹராம் என்று ஆக்கினானோ அது கியாமத் வரைக்கும் அப்படியேதான் என்று உறுதியுடன் மொழிந்தார்கள்.
உடனே இப்லீஸ் தோன்றி, இவ்வளவு நேர்த்தியாக நான் விஷயங்களை நடத்தினாலும், அப்துல் காதிரே நீங்கள், உங்கள் இல்ம் எனும் அறிவு தீட்சனத்தால் தப்பிவிட்டீர்கள் என்றான்.
உடனே எஜமான் அவர்கள், அடே மல்ஊனே நான் எனது அறிவால் தப்பவில்லை அலீமாகிய அறிவாளனாகிய அல்லாஹ்வினால் தான் தப்பினேன் என்று கூறினார்கள்.
அதாவது, அறிவிருக்கும் எத்தனையோ பேர் தவறு என்று தெரிந்தும் சருகியதுண்டு. ஏன் ஓதிப்படித்த ஆலிம்கள் கூட சருகியதுண்டு. ஆக அறிவிருந்தும் அதை சரியான நேரத்தில் உதிப்பாக்கி வைத்து அதை விட்டு காப்பாற்றுவது அல்லாஹ் தான் என்று எஜமான் சொன்னபோது இப்லீஸ் முற்றிலுமாக அவர்களிடம் தோற்று விட்டான்.
எனவே தான் எஜமான் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மனமுருகி சொன்னார்கள்…
اَلْحَمْدُ لِلهِ حَمْدًا دَآئِمًا اَبَدًا ، وَالْحَمْدُ لِلهِ ثُمَّ الْحَمْدُ لِلهِ
اَلْحَمْدُ لِلهِ رَبِّ الْعَا لَمِيْنَ عَلٰى ، مَا كَاَنَ يُلْهِمُنِيْ اَلْحَمْدُ لِلهِ
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஹம்து எனும் புகழ் நித்தியமாக நிரந்தரமாக இலங்கி கொண்டிருக்கும் காலமெல்லாம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!மீண்டும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! இன்னும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் !
அகிலமனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று எனக்கு அறிவித்து உதயமாக்கி தந்து புரிந்து கொள்ளவைத்ததற்கான புகழும் அல்லாஹ்வுக்கே ஆகும் என்று பாடியருளினார்கள்.
நாமும் இதை நமது வாழ்க்கையில் மிகவும் உவப்புடன் அதிகமாக கூறுவோமாக! நாயன் தமக்களித்ததை நமக்களித்த நமது நாயகங்களின் உவப்பை பெறுவோமாக! ஆமீன்!!
مَوْلاَى صَلِّ وَسَلِّمْ دَائِمًا اَبَدًا ، عَلٰى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ
வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!