உயிருள்ளவர்களிடம் கேட்டால் தவ்ஹீத்! இணைவைப்பிற்கு அளவுகோலா இது?

உயிருள்ளவர்களிடமிருந்தோ, மரணித்தவர்களிடம் இருந்தோ   சக்தி வெளிப்பட்டால் அது அல்லாஹ்வின் ஆற்றலை கொண்டுதான் என்பது சுன்னத் ஜமாஅத்தின் ஏகோபித்த கொள்கை. ஆனால்  தவ்ஹீது ஜமாத் என்று சொல்லிக்கொள்பவர்கள் மவ்தானவர்களிடம் கேட்டால் இணைவைத்தல், உயிருள்ளவர்களிடம் கேட்டால் தவ்ஹீது என்று கூறுகின்றனர். இந்த  அவர்களின் அளவுகோல், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சொற்ப பகுத்தறிவு தான் என்பதை நாம் ஆதாரத்துடன் கூறுகிறோம்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் மரணித்து சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து, மிஃராஜில் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து கடமையாக்கப்பட்ட ஐம்பது நேரத்தொழுகையை குறைக்குமாறு அல்லாஹ்விடம் சென்று கேளுங்கள் என்று ரஸூலுல் அக்ரம் அவர்களிடம் சொன்னார்கள் என்று புஹாரி ஷரீஃப் 349,3207,3342, 3887,7517, முஸ்லிம் ஷரீஃப்  259,263, வருகிறது. நமக்கு 50 நேரம் தொழுவது கஷ்டம் என்பதை விளங்கி நமக்கு உதவி செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் சற்று யோசனை செய்து பாருங்கள்! ஏதோ ஒரு விஷயமல்ல.ஒவ்வொரு வேலையும் நாம் தொழும் தொழுகை சம்பந்தப்பட்டது! இதுவே ஒரு மரணித்த மஹானின் உதவிதான் இவ்வளவு லேசக்கப்பட்டிருக்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இங்கேயே உணமையான ஷிர்க் ஒழிக்கப்பட்டுவிட்டது!

அது போல, உயிர் இல்லாத வஸ்துவுக்கு, களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி,ஈஸா அலைஹிஸ்ஸாம் அவர்கள் அதில் ஊதியபின்  அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு உயிருடைய  பறவையாகி பறந்தது என்று  (சூரா ஆல இம்ரான் 3 :49) (சூரா மாயிதா 5 :110) கூறிக்கொண்டிருக்கிறது.

இன்னும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்தினார்கள், அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பித்தார்கள் என்றும் சூரா ஆல இம்ரான் 3 :49, சூரா மாயிதா 5 :110 முழங்குகின்றது.

இன்னும் கேளுங்கள், அறுத்து போடப்பட்ட நான்கு பறவைகளை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் நான்கு திசைகளில் வைத்த பின் அல்லாஹ் அழைக்கச்சொன்னான். அவர்கள அழைத்தார்கள் , பறவை உயிரானது! (சூரா பகரா 2:260)

இதுவெல்லாம் அல்லாஹ்வுக்குரியதல்லவா? அவன் நாடியவர்களுக்கு வழங்குவான் என்று போகாமல், மரணித்தவர்களுக்கு சக்தி வழங்கப்பட்டிருக்கின்றது என்று நம்பினாலே இணைவைப்பென்று என்று சொல்லுபவர்கள், மரனித்தவர்(வை)களை அழைத்து உயிர்பித்ததை என்ன சொல்வார்ளோ?!

சரி இவர்கள் நபிமார்கள் என்றால், இஸ்ரவேலர்கள் காலத்தில் கொல்லப்பட்ட மனிதரை கொன்றவன் யார் என்று அறியவேண்டினார்கள் மூஸா நபியிடம். அவர்கள், அல்லாஹ் தஆலாவிடம் கேட்டு, பின் அந்த  கொலையுண்ட மனிதனின் மேல், குறிப்பிட்ட மாட்டின் அறுக்கப்பட்ட   ஒரு பகுதியால் (வாலால்) அடிக்கசொன்னார்கள். அப்படியே செய்த போது, அந்த மய்யித் உயிர்பெற்று எழுந்து பேசியது, தன்னை யார் கொலை செய்தது என்றும் சொன்னது என்று வரும் சூரா பகராவின் 2 : 72-73, இந்த ஆயத் அல்லாஹ் தான் நாடியதை யாருக்கும் வழங்கும் சர்வ சக்தன் என்று உணர்த்துகின்றதல்லவா? சரி, அல்லாஹ்விடத்தில், செத்த மாட்டிற்கு அந்தஸ்தா? அல்லது அவனது நேசர்களுக்கு அந்தஸ்தா?

ஆக, உயிருள்ளவர்கள் உதவி செய்வதும், மரணத்திற்கு பின் உதவி செய்வதும், இன்னும் மனிதன் மரணித்தவர்களை அல்லாஹ்வின் உத்தரவை கொண்டு உயிர்பிப்பதும், மரணித்தவை மரணித்த மனிதனை உயிர்பெறச்செய்வதும், இன்னும் இது போன்ற அதிசயிக்கதக்க அற்புதங்கள் எல்லாம் அல்லாஹ் தஆலாவின்  ஆற்றலில் நின்றும் பெறப்பட்டவையே என்பது சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை. ஆனால் தவ்ஹீதுவாதிகள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள், உயிருள்ளவர்கள் உதவி செய்வது தமது ‘சுயசக்தியை’ கொண்டு என்று ‘இணைவைப்பதினால்’, அல்லாஹ் தஆலா சொல்லித்தந்த ஏகத்துவத்தின் வாடையை கூட உணர முடியாது, காமாலைக்கண் உள்ளவனுக்கு கான்பதெல்லாம் மஞ்சலாக தெரிவது போல், எல்லாம் இவர்களுக்கு இணைவைப்பாகவே தெரிகின்றது.

இவர்கள் ஃபித்னாவை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!ஆமீன்!!

நன்றி : முஹ்யித்தீன் டீவி.காம்